வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

முஸ்லிம்கள் தலைமையேற்று நடத்திய சுதந்திர போராட்டம்

இந்திய நாடு ஆங்கில ஏகாதிபத்திய காலனி ஆதிக்க ஆட்சியிலிருந்து விடுதலையடைந்து 62 ஆண்டுகள் முடிகிறது.1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நள்ளிரவில்தான் நமது நாடு சுதந்திரமடைந்தது.1498 ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களால் துவக்கி வைக்கப்பட்ட அந்நிய ஆக்கிரமிப்பு இரண்டு நூற்றாண்டுகள் நீண்ட பிரிட்டீஷ் ஆட்சியோடு முடிவடைந்தது.இந்த நாலரை நூற்றாண்டு காலமும் தேசப்பற்றாளர்களான மக்கள் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாகத்தான் ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய அந்த நிமிடங்களை பெற்றுதந்த சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தன்னலமற்ற தியாகங்களை அர்ப்பணித்தார்கள்.துரதிர்ஷ்டவசமாக நம்முடைய வரலாற்று நூல்களில் சுதந்திர போராட்டத்தை பற்றிய பாடங்கள் குறைப்படுத்தப்பட்டுள்ளன.முஸ்லிம் சமூகம் சுதந்திர போராட்டத்தில் அளித்த மாபெரும் தியாகங்கள் மறைக்கப்பட்டுள்ளன.சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு பங்கில்லை என்றும் அவர்கள் இந்த நாட்டை துண்டாடியதற்கு காரணமானவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.முஸ்லிம்களுக்கும் ஹிந்துக்களுக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்த விரும்பி பிரிட்டீஷ் வரலாற்றாசிரியர்கள் செய்த சதி இது.

போர்த்துகீஷியர்களின் தாக்குதல்களும் மாப்பிளா போராளிகளும்

இந்திய‌ துணைக்க‌ண்ட‌த்தில் ம‌த‌ப்பிர‌ச்சார‌ம் ம‌ற்றும் வியாபார‌த்திற்காக‌ நாட்டை ஆக்கிர‌மிக்க‌ வேண்டும் என்ற‌ நோக்கில் முத‌ன் முத‌லில் நுழைந்த‌ அந்நிய‌ ச‌க்தி போர்ச்சுக‌ல்.1498 ஆம் ஆண்டு கேர‌ளாவில் காப்பாடு என்ற‌ இட‌த்தில் வாஸ்கோட‌காமா க‌ப்ப‌லில் வ‌ந்திற‌ங்கினார்.தாக்குத‌ல் ந‌ட‌த்தி விட்டு திரும்பிச்சென்றார் வாஸ்கோட‌காமா.கேப்ரால்(CABRAL) என்ப‌வ‌ரின் த‌லைமையில் இன்னொரு க‌ப்ப‌லில் போர்த்துகீஷிய‌ர்க‌ள் கோழிக்கோட்டில் வ‌ந்திற‌ங்கினார்க‌ள்.த‌ன்னோடு வ‌ந்த‌ கிறிஸ்த‌வ‌ ச‌ந்நியாசிக‌ளுக்கு வ‌ச‌திக‌ளை ஏற்ப‌டுத்திக்கொடுக்க‌வும் முஸ்லிம்க‌ளை வெளியேற்ற‌வும் கேப்ரால் கோரிக்கை விடுத்தார்.விரும்பிய‌ விலைக்கு பொருட்க‌ள் கிடைக்காத‌தால் கேப்ரால் கோழிக்கோடு க‌ட‌ல்புற‌த்தில் க‌ப்ப‌ல்க‌ளை கொள்ளைய‌டிக்க‌த்தொட‌ங்கிய‌தைத்தொட‌ர்ந்து ஏற்ப‌ட்ட‌ க‌ல‌க‌த்தில் 70 போர்த்துகீசிய‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.ஆனால் கேப்ரால் மன்னர் சாமுத்ரியின் 10 க‌ப்ப‌ல்க‌ளை கைப்ப‌ற்றி பீர‌ங்கியால் 600 பேரை கொன்ற‌ பிற‌கு இட‌த்தை காலிச்செய்தார்.போர்த்துகீசிய‌ர்க‌ளுக்கெதிராக‌ போராடிய‌ ம‌ன்ன‌ர் சாமுதிரியின் க‌ப்ப‌ல் ப‌டைக்கு த‌லைமை தாங்கியவர்கள் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மரைக்காயர்கள் என்றழைக்கப்படும் இவர்கள் இந்திய கடற் பிரதேசத்திலிருந்து ஒரு நூற்றாண்டுகாலம் போர்த்துகீசியர்களை அகற்றினார்கள்.கோழிக்கோட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட வாஸ்கோடகாமாவை கொச்சியின் மன்னர் உண்ணிக்கோத வர்மா கோயில் திருமுல்பாடு வரவேற்றார்.இது பின்னர் கொச்சிக்கும் கோழிக்கோட்டிற்குமிடையே நடந்த போர்களுக்கு வழி வகுத்தது.அடுத்த ஆண்டு நோவாவின் தலைமையில் வந்த இன்னொரு படையும் கோழிக்கோட்டை தாக்கியது.இவர்களுக்கும் கொச்சி மன்னர் அபயமளித்தார்.அதற்கு அடுத்த ஆண்டு பெரிய படையோடு வந்த கேப்ரால் கண்ணூருக்கடுத்த மாடாயி என்ற ஊருக்கு ஹஜ் முடிந்து திரும்பி வந்த கப்பலை கைப்பற்றி அதிலிருந்த பெண்களும்,குழந்தைகள் உட்பட 240 நபர்களை கப்பலில் வைத்தே தீயிட்டுக்கொழுத்தினார்.தொடர்ந்து மன்னர் சாமுதிரி வாஸ்கோடகாமாவிடம் தூதராக அனுப்பிய தலவன என்ற நம்பூதிரியின் மூக்கும்,காதும் அறுத்து அதனை கறிவைத்து சாப்பிடப்போவதாக எழுதிய கடிதத்தை மன்னர் சாமுதிரிக்கு வாஸ்கோடகாமா அனுப்பினார்.இந்தத்தாக்குதல்களுக்கு பின்னர் வாஸ்கோடகாமா கொச்சிக்கு சென்றார்.அன்று வரை கடல் என்பது எல்லா நாடுகளுக்கும் சொந்தமானதாக இருந்தது. பின்னர் வாஸ்கோடகாமாவின் கட்டளைப்படி கடல் முழுவதும் போர்த்துகீசியர்களுக்கு சொந்தமென்றும் அதில் அவர்களின் அனுமதி கடிதம் இல்லாமல் எவரும் பயணம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆதிக்கவெறியர்களான போர்த்துக்கீசியர்களுக்கு வரவேற்று ஆதரவு அளித்த கூட்டத்தில் கொச்சி மன்னர் மட்டுமல்ல கிறிஸ்தவ உயர்மட்ட சபையைச்சார்ந்தவர்களும் இதில் அடங்குவர்.கொடுங்கல்லூர் பிரதேசத்தில் மார் ஜேக்கப் என்ற கிறிஸ்தவ உயர்சபையைச்சார்ந்தவர் போர்ச்சுகல் மன்னன் மூன்றாவது ஜாணுக்கு 1523 இல் பாதுகாப்பு கேட்டு எழுதிய கடிதத்தில்,"தங்களுக்கு சேவை செய்வதற்காக நாட்டில் கிறிஸ்தவர்கள் ஒன்று சேர்ந்துள்ளார்கள்.நேரம் வரும்பொழுது 25 ஆயிரம் போர்வீரர்களை நீங்கள் காண்பீர்கள்".என்று குறிப்பிடப்பட்டிருந்தது.லத்தீன் கிறிஸ்தவர் என்ற புத்தகத்தில் பிரதர் லியோ போல் என்பவர் எழுதுகிறார்,"மாபெரும் கருணையாளனான இறைவன் கேரளத்தில் கிறிஸ்தவர்களோடு காட்டிய கருணைதான் போர்த்துகீசியர்களின் வருகை".என்று.

பின்னர் வந்த ஆக்கிரமிப்பு குழுக்கள் ஒரு நூற்றாண்டு முழுவதும் போர்புரிந்தார்கள்.இக்காலக்கட்டத்தில் மரைக்காயர்களின் தலைமையில் முஸ்லிம் படைவீரர்கள் இந்திய கடல் பிரதேசங்களிலும்,கொழும்புவிலும்,மாலத்தீவு முதல் சுமத்திரா வரையிலும் போர்த்துகீசியர்களோடு போர்புரிந்தார்கள்.நான்காமது குஞ்ஞாலி மரைக்காயரை தவிர வேறு எவரும் சரணடையவில்லை.போர் செய்து இரத்த சாட்சிகளாக மாறினார்கள்.வடக்கு கேரளத்தின் கடல் பகுதிகளில் மட்டுமல்ல விழிஞ்ஞம்,தேங்காய்ப்பட்டணம்,பரவூர் போன்ற இடங்களிலும் தமிழ் நாட்டில் நாகப்பட்டினம்,காயல்பட்டினம்,தூத்துக்குடி போன்ற இடங்களிலும் குஞ்ஞாலி மரைக்காயர்களின் படையினருக்கு ஆதிக்கம் இருந்தது.நிலப்பிரபுக்களையும்,குறுநில மன்னர்களையும் கைக்குள் போட்டுக்கொண்ட போர்த்துகீசியர்களுக்கு கன்னியாகுமரி முதல் கோவா வரை ஆதிக்கம் செலுத்த முடிந்தது.இந்தியாவிலும் ஆப்ரிக்காவிலும் பெரும்பாலான மன்னர்கள் போர்த்துகீசியர்களுக்கு கட்டுப்பட்டபோதும் மன்னர் சாமுத்ரி போர்த்துகீசியர்களுக்கு கீழ்படியாததற்கு காரணம் முஸ்லிம் படையினரின் ஆதரவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.நேரடி போரில் கோழிக்கோட்டை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த போர்த்துகீசிய தளபதி அல்புக்கர்க் 1513 இல் கோழிக்கோட்டைச்சார்ந்த இளமுற தம்புரான் இலங்கூர் நம்பூதிரி திருமூலப்பாடின் மூலம் அன்றைய சாமுத்ரி மன்னரை விஷம் கொடுத்து கொன்றார்.குஞ்ஞாலி மரைக்காயர்கள் பின்னர் தங்கள் இருப்பிடத்தை பொன்னானிக்கு மாற்றினார்கள்.1525 இல் செம்பகசேரி மன்னன் மற்றும் புறக்காடு மன்னனின் கப்பல்படை தளபதி புறக்காடு அரயன் ஆகியோரின் துணையோடு போர்த்துகீசியர்கள் பொன்னானி மீது தாக்குதல் தொடுத்தனர்.ஆனால் பின்னர் தளபதி புறக்காடு அரயனை வைஸ்ராய் மெனஸிஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச்செய்தான்.1535 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் காயல் பட்டினத்தில் முஸ்லிம்கள் பரவர்(மீனவர்கள்) இனத்தைச்சார்ந்தவர்களுக்கும் மீன்பிடிப்பதில் சண்டை மூண்டது.பரவர்கள் கிறிஸ்தவர்களானதால் இதனைப்பயன்படுத்தி அவர்களோடு இணைந்து போர்த்துகீசியர்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர்.அலி இப்ராஹீம் மரைக்காயரும்,ஃபக்கீ அஹ்மத் மரைக்காயரும் காயல் பட்டினத்தில் முஸ்லிம்களுக்கு போர்த்துகீசியர்களுக்கெதிராக உதவிச்செய்தனர்.போர்த்துகீசியர்களுக்கெதிராக இலங்கைக்கு உதவிச்செய்த ஃபக்கீ அஹ்மத் மரைக்காயரும்,அவருடைய சகோதரன் குஞ்ஞாலி மரைக்காயரும் இரத்த சாட்சிகளானார்கள்.70 ஆண்டுகாலம் போர்த்துகீசியர்கள் குஞ்ஞாலியின் படையை அழிப்பதற்கு ஓய்வில்லாமல் முயற்சிச்செய்தார்கள்.சில நேரங்களில் சாமுத்ரிகள் பலகீனமடைந்தாலும் முஸ்லிம்கள் பின்வாங்கவில்லை.ஆனால் 1599 ஆம் ஆண்டு அன்றைய சாமுத்ரி மன்னன் போர்த்துகீசியர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்.கடலிலிருந்து போர்த்துகீசியப்படையும்,நிலத்திலிருந்து சாமுத்ரி மன்னனின் படையினரும் பொன்னானியில் நான்காவது குஞ்ஞாலியின் இருப்பிடத்தை நோக்கி தாக்குதலைத்தொடுத்தனர்.முதல் கட்டத்தில் குஞ்ஞாலிக்குதான் வெற்றி கிடைத்தது.இதில் 500 போர்த்துகீசியர்கள் கொல்லப்பட்டனர்.பின்னர் போர் தோல்வியை நோக்கி சென்றது.தேசப்பற்றாளரான நான்காவது குஞ்ஞாலி மரைக்காயர் சாமுத்ரிக்கு முன்பு சரணடைவேன் ஆனால் போர்த்துகீசியருக்கு முன்னால் சரணடையமாட்டேன் என்று அறிவித்தார்.1600 மார்ச் 16 ஆம் தேதி சரணடைந்த நான்காவது குஞ்ஞாலி மரைக்காயரையும் அவருடனிருந்த 40 படையினரையும் பின்னர் நயவஞ்ச‌கத்தனமாக சாமுத்ரி மன்னன் போர்த்துகீசியரிடம் ஒப்படைத்தான்.இதனைக்கண்டித்து நாயர் சமூதத்தைச்சார்ந்த படையினர் கலகம் செய்தனர். பின்னர் கோவாவிற்கு கொண்டுச்செல்லப்பட்ட நான்காவது குஞ்ஞாலி மரைக்காயரையும் 40 முஸ்லிம் படைவீரர்களையும் போர்த்துகீசியர் மதம் மாறுமாறு வற்புறுத்தினர்.இதற்கு அவர்கள் மறுப்புதெரிவித்தனர்.ஆதலால் அவர்களை போர்த்துகீசியர் கொன்று கண்டந்துண்டமாக வெட்டி கடலில் எறிந்தனர்.நான்காவது குஞ்ஞாலியின் தலையை வெட்டி உப்பிலிட்டு அதனை ஈட்டியில் குத்தி கண்ணூரில் பொது இடத்தில் காட்சிக்கு வைத்தார்கள்.கடற் கொள்ளையர்களான போர்த்துகீசியர்களுக்கெதிராக சொந்த உயிரைக்கொடுத்துப்போராடிய போராளிகள் தாங்கள் சிந்திய இரத்தத்தால் கடல் நீருக்கும் பிரகாசத்தை ஏற்படுத்தினார்கள்.

டச்சுக்காரர்களும்,பிரஞ்சுக்காரர்களும்

போர்த்துகீசியர்களை தொடர்ந்து டச்சு(ஹாலந்து நாட்டவர்)காரர்களும்,பிரான்சு நாட்டைச்சார்ந்தவர்களும் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள்.டச்சுக்காரர்களுக்கு வியாபாரம் நோக்கமாக இருந்தாலும் பிரஞ்சுக்காரர்களுக்கு ஆக்கிரமிப்பிலும் விருப்பம் இருந்தது.ஆனால் இந்த இரு நாட்டவர்களும் போர்ச்சுகல்,பிரிட்டீஷ் நாட்டைச்சார்ந்தவர்களைப்போல் மதவெறியர்களல்லர்.பிற்காலத்தில் மூன்றாவது கர்நாடகா போரின் முடிவில் பிரிட்டீஷார் பிரஞ்சுக்காரர்களை தோற்கடித்தார்கள்.

.

பிரிட்டீஷ் ஆக்கிரமிப்பும் எதிர்ப்புபோராட்டமும்

கி.பி.1600 டிசம்பரில் லண்டனைச்சார்ந்த சில வியபாரிகள் ஒன்று சேர்ந்து ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்கள்.கிழக்கத்திய நாடுகளில் வியாபாரம் செய்வதற்கு 15 ஆண்டுகளுக்கான குத்தகை உரிமையை எலிசபத் ராணியிடமிருந்து வாங்கினார்கள்.1611 ஆம் ஆண்டுதான் பிரிட்டீஷார் முதல் வணிக சாலையை மசூலிப்பட்டினத்தில் ஆரம்பித்தார்கள்.1612 ஆம் ஆண்டு போர்த்துகீசியர்களை கடல்போரில் தோற்கடித்து சூரத்தை கைப்பற்றினார்கள்.பின்னர் ஆக்ராவிலும்,அஹமதாபாத்திலும் வணிக நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன.1639 இல் பிரான்சிஸ் டே என்பவர் இன்றைய சென்னை நகரை உருவாக்கினார்.பீகாரில் பாட்னா,வங்காளத்தில் டாக்கா ஆகிய நகரங்களையும் கைப்பற்றினர்.1665 இல் போர்த்துகீசியர்களிடமிருந்து பாம்பையை கைப்பற்றினார்கள்.இந்தக்காலக்கட்டத்தில் மொகலாய ஆட்சி இந்தியாவில் சிதிலமடையத்தொடங்கியிருந்தது.

வ‌ங்காள‌த்தில்தான் இந்தியாவில் பிரிட்டீஷ் சாம்ராஜ்ஜிய‌த்திற்கு அடித்த‌ள‌ம் போட‌ப்ப‌ட்ட‌து.க‌ட‌ற்ப‌டையில் எவ‌ராலும் வெல்ல‌ முடியாத‌ பிரிட்டீஷாருக்கு வ‌ங்காளம் முன்னால் சுத‌ந்திர‌ நாடாக‌ இருந்த‌து.இன்றைய‌ ப‌ங்க‌ளாதேஷும்,மேற்கு வ‌ங்காள‌மும்,பீகாரும்,ஒரிஸ்ஸாவும் உள்ள‌ட‌க்கிய‌ அன்றைய‌ வ‌ங்காள‌த்தில் ஆட்சியாளராக இருந்த ந‌வாப் க‌ல்க‌த்தாவில் கோட்டைக‌ளை உடைத்தெறிய‌ உத்த‌ர‌விட்டார்.தொட‌ர்ந்து ப‌டைய‌த்திர‌ட்டிய‌ ந‌வாப் க‌ல்க‌த்தாவிலும்,காஸிம் ப‌ஸாரிலும் தொழிற்சாலைக‌ளை கைப்ப‌ற்றினார்.146 பிரிட்டீஷாரை கைதுச்செய்தார்.இத‌னைத்தொட‌ர்ந்து ராப‌ர்ட் க்ளைவின் த‌லைமையில் மெட்ராஸை த‌லைமையிட‌மாக‌க்கொண்ட‌ பிரிட்டீஷ் ப‌டை திர‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.அந்த‌ப்ப‌டை க‌ல்க‌த்தாவை கைப்ப‌ற்றிய‌து.பெருந்தொகையை ந‌ஷ்ட ஈடாக‌ பெற்று க‌ல்க‌த்தாவில் புதிய‌ கோட்டைக‌ளை க‌ட்டின‌ர்.ந‌வாபின் ப‌டைத்த‌ள‌ப‌தி மீர் ஜாஃப‌ரை கைக்குள் போட்டுக்கொண்ட‌ ராபர்ட் க்ளைவ், 1757 ஆம் ஆண்டு ஜூன் மாத‌ம் 23 ஆம் தேதி ப்ளானியில் வைத்து நவாபுட‌ன் போர் புரிந்தார்.அதில் ந‌வாப் இர‌த்த‌ சாட்சியானார்.பின்ன‌ர் மீர் ஜாஃப‌ரை ந‌வாபாக்கினார்க‌ள்.மீர் ஜாஃப‌ருட‌ன் க‌ருத்துவேறுபாடு கார‌ண‌மாக‌ அவ‌ருடைய‌ உற‌வின‌ரான‌ மீர் காஸிமை ந‌வாபாக்கினார்க‌ள்.பிளாசி யுத்த‌ம் இந்திய‌ வ‌ர‌லாற்றில் திருப்பு முனையை உருவாக்கிய‌து.ஆனால் மீர் காஸிம் மீர் ஜாஃப‌ரைப்போல் பொம்மையாக‌ இருக்க‌ விரும்ப‌வில்லை.இத‌னைத்தொட‌ர்ந்து பிரிட்டீஷார் அவரை பதவியிலிருந்து இறக்கி மீண்டும் மீர் ஜாஃப‌ரையே ந‌வாபாக்கினார்க‌ள்.

மீர்காஸிம் அயோத்தியாவில் ஷுஜாவுத்த‌வுலாவுட‌னும் மொக‌லாய‌ ம‌ன்ன‌ர் ஷா ஆல‌முட‌னும் கூட்ட‌ணி அமைத்து ஒருங்கிணைந்த‌ ராணுவ‌த்தை உருவாக்கினார்.ஆனால் 1764 ஆம் ஆண்டு அக்டோப‌ர் 22 ஆம் தேதி புக்ஸாரில் வைத்து ந‌டைபெற்ற‌ போரில் மேஜ‌ர் ம‌ன்ரோவின் த‌லைமையிலான‌ பிரிட்டீஷ் ப‌டை மீர்காஸிம் த‌லைமையிலான‌ ப‌டையை தோற்க‌டித்த‌து.பிளாசி போரின் மூல‌ம் ஆங்கிலேய‌ர்க‌ள் அடித்த‌ள‌மிட்ட‌ அர‌சிய‌ல் ஏகாதிப‌த்திய‌ம் புக்ஸார் போர் மூலம் உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து.இத‌னைத்தொட‌ர்ந்துதான் இர‌ட்டை ஆட்சி முறை ந‌டைமுறைக்கு வ‌ந்த‌து.வ‌ங்காள‌த்தில் ஆட்சி ந‌ட‌த்தும் பொறுப்பு ந‌வாபிற்கும்,போதிய‌ அதிகார‌மும் வ‌ரிவ‌சூல் செய்வ‌தும் பிரிட்டீஷ் க‌ம்பெனியும் ந‌ட‌த்தின‌.

முதல் சுதந்திரப்போராட்டம் 1857

முதல் சுதந்திரபோர் என்று போற்றப்படும் 1857இல் நடைபெற்ற கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்கள் முஸ்லிம்கள்.முஸ்லிம் மார்க்க அறிஞர்களும்,முஸ்லிம் ஆட்சியாளர்களும்தான் இந்த கிளர்ச்சிக்கு தலைமை வகித்தவர்கள்.ஷா வலியுல்லாஹ் அத்தஹ்லவியின் புதன் ஷா அப்துல் அஸீஸ் தஹ்லவி இந்தியா "தாருல் ஹர்ப்(போராட்ட பூமி)"என்றும் இங்கு புனித போர் நடத்தப்படவேண்டும் என்றும் ஃபத்வா(மார்க்க தீர்ப்பு)வழங்கினார்.தனது முக்கிய சீடர் செய்யத் அஹ்மத் ராய்பரேலிக்கு ஆங்கிலேயருக்கு எதிரான போருக்கு தலைமை ஏற்கும் பொறுப்பை வழங்கினார்.ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம் சிப்பாய்களையும்,பொதுமக்களையும் களத்தில் இறக்கியது ஃபைஸாபாத்தைச்சார்ந்த மார்க்க அறிஞர் மெளலவி அஹ்மதுல்லாஹ் ஷாவும்,டெல்லியைச்சார்ந்த மார்க்க அறிஞர் ஃபஸ்லுல் ஹக் ஹைரபாதியும் ஆவர்.

முஸ்லிம்களும் ஹிந்துக்களும் அடங்கிய பெரிய படையொன்றை உருவாக்கிய அஹ்மதுல்லாஹ் ஷா ஆங்கிலேயரோடு போரிட்டார்.இறுதியில் ஆங்கிலேயரின் கைக்கூலியான அயோத்தியில் சிற்றரசு நடத்தி வந்த பான்ராஜா ஜகன்னாத சிங் உதவியுடன் அஹ்மதுல்லாஹ் ஷாவின் தலை அறுக்கப்பட்டது.இந்த துரோகத்தைச்செய்தற்காக ஜகன்னாத சிங்குக்கு பரிசாக ரூபாய் 50 ஆயிரம் கிடைத்தது.ஃபஸலுல் ஹக் ஹைரபாதியின் தலைமையில் டெல்லியில் பிரபல மார்க்க அறிஞர்கள் ஒன்று கூடி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவேண்டும் என்று பிரகடனப்படுத்தினார்கள்."தீன், தீன் பிஸ்மில்லாஹ்" என்று முழக்கமிட்டுக்கொண்டு கிளர்ச்சியாளர்கள் போர்க்களத்தை நோக்கி பாய்ந்து வந்தார்கள் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.மவ்லானா இமாருல்லாஹ்,அப்துல் ஜலீல்,லியாக்கத் அலி,பீர் அலி ஆகியோரும் ஆங்கிலேயருக்கு எதிரான போரில் தலைமை வகித்தனர்.

ஆங்கிலேய‌ருக்கெதிரான‌ கிள‌ர்ச்சியில் வீரிய‌ம் த‌ந்த‌து இர‌ண்டு இய‌க்க‌ங்க‌ள்.ஒன்று டெல்லியில் செய்ய‌த் அஹ்ம‌த் ராய்ப‌ரேலியின் த‌லைமையிலான‌ ஹிந்துஸ்தான் முஜாஹிதீன் இய‌க்க‌மும், வ‌ங்காள‌த்தில் ஹாஜி ஷ‌ரீஅத்துல்லாஹ் த‌லைமையிலான‌ பெரய்சி இய‌க்க‌மும்தான்(Farizis Movement).

மொகலாய சக்ரவர்த்தி பஹதூர் ஷா ஷஃபரின் தலைமையில் முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஒன்றிணைந்து சுதந்திர தாகத்திற்கு வீரியம் ஊட்டினார்கள்.முஜாஹிதீன் இயக்கத்தவர்கள் ஆங்கிலேய கம்பெனி ராணுவத்தில் இணைந்து இந்திய சிப்பாய்களை ஒன்றிணைத்து ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்தினார்கள்.செய்யத் அஹ்மத் ராய்பரேலி இரத்த சாட்சியான‌ பிறகும் அப்போராட்டம் தொடர்ந்தது.விலாயத் அலியும்,இனாயத் அலியும் தலைமையேற்று நடத்திய இந்த போராட்டத்தில்தான் வங்காளத்தின் முதன்மை நீதிபதி நார்மனும்,வைஸ்ராய் மயோ பிரபுவும் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில்தான் கிளர்ச்சி உச்சகட்டத்தை எட்டியது.அலிகர்,ராய்பரேலி,பிஜ்நோர்,மொராதாபாத்,பதயூன்,ஷஜஹான்பூர் ஆகிய இடங்களில் ஏராளமான பிரிட்டீஷ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.அலிகரில் ஸியத் முஹம்மத் கானும்,ரோஹில் கந்தில் கான் பஹதூர் கானும் மொகலாய மன்னரின் பிரதிநிதிகளாக ஆட்சி புரிந்தார்கள்.

1857 மே 10 அன்று மீரட்டில்தான் முதல் கிளர்ச்சி ஆரம்பமானது.சிப்பாய்கள் ஆங்கிலேயர்களை கொன்று துப்பாக்கிகளை கைப்பற்றி "அந்நிய ஆட்சி வீழ்க!பேரரசர் பகதூர்ஷா வாழ்க!" என்ற கோஷங்களுடன் மீரட்டில் திரண்ட 2000 ஆயுதம் தரித்த குதிரை வீரர்கள் "டில்லி சலோ" என்ற கோஷத்துடன் ரிஸால்தார் ஹுசைன் அலி அவர்கள் தலைமையில் டில்லி நோக்கி புறப்பட்டனர். அவர்களிடம் பேசிய பஹதூர்ஷா கூறினார்,"நான் ஒரு ஃபக்கீர்.எனக்கு நிதி கருவூலமோ, ராணுவமோ இல்லை.ஆனால் உங்களுடைய விஷயத்தில் எனக்கு என் உயிர் ஒரு பொருட்டேயல்ல" என்றார்.முதல் வெற்றி தேசபற்றாளரான போராளிகளுக்குதான் கிடைத்தது.பாட்டியாலாவில் ஹிந்து மன்னன்,பஞ்சாபில் சீக்கிய மன்னன்,ஹைதராபாத் நிஜாம் ஆகியோருடன் கூட்டணி வைத்து பிரிட்டீஷார் திருப்பி தாக்கினர்.1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம்தேதி நஜஃப்கரில் வைத்து பிரிட்டீஷார் பகதூர்ஷாவை தோற்கடித்தனர்.தோற்கடிக்கப்பட்ட பகதூர்ஷாவும் குடும்பமும் ஹிமாயூனின் கல்லறைக்கருகில் இரவில் தங்கினர்.பொழுது புலர்ந்ததும் பிரிட்டீஷ் மேஜர் ஹட்ஸன் அந்த இடத்தை சுற்றி வளைத்து குடும்ப அங்கங்களை கொன்ற பிறகு பகதூர்ஷாவையும்,அவரது மனைவியையும் பர்மாவுக்கு நாடுகடத்தினர்.1862 ஆம் ஆண்டு நவம்பர் 7இல் தனது 92ஆம் வயதில் பகதூர்ஷா பர்மாவின் தலைநகர் ரங்கூனில் மரணமடைந்தார்.

மைசூர் சிங்கங்களின் போராட்டம்

ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் போராட்டமிகுந்த ஆட்சி ஆங்கிலேயர்களுக்கு கறுப்பான பக்கங்களாக மாறியது.இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான உறுதியான எதிர்ப்பு மூலம் பிரபலமாயினர்.நரியாக நூறாண்டுகள் வாழ்வதைவிட சிங்கமாக ஒரு நாள் வாழ்வதே சிறந்தது என்பதுதான் திப்புவின் கொள்கை.ஹைதர் அலி தனது மகனுக்கு மரணவேளையில் வழங்கிய வாக்குமூலம் வெள்ளைக்காரனோடு மரணம் வரை போராட வேண்டுமென்பதாகயிருந்தது.1760 இல் ஹைதர் அலி ஆரம்பித்துவைத்த பிரிட்டீஷ் எதிர்ப்பு போர் 1799 இல் திப்புசுல்தான் இரத்த சாட்சியாகும் வரைத்தொடர்ந்தது.1776 இல் மராட்டியர்களும் ஹைதரபாத் நிஜாமும் பிரிட்டீஷாரும் சேர்ந்துதான் மைசூர் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.இந்த தாக்குதலை எதிர்த்து கடுமையாக போராடி தோற்கடித்தார் ஹைதர் அலி.பின்னர் நிஜாமை தனது ஆதரவாளராக மாற்றி பிரிட்டீஷாருக்கு எதிராக போராடி அவர்களை தோற்கடித்தார்.மதராஸிலிலுள்ள கோட்ட வாதில்கல் என்ற இடத்தில் வைத்து இந்தியர்களுக்கு வலிமையூட்டுமளவிலான சில ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கினார்.1780 ஆம் ஆண்டு இந்தியாவிலிலுள்ள அனைத்து பிரபல சக்திகளையும் ஒன்றிணைத்து பிரிட்டீஷாருக்கு எதிரான கூட்டணியை உருவாக்கினார்.இந்தக்கூட்டணியில் ஹைதராபாத் நிஜாமும்,நானா சாஹிபும்,சிந்தியாவும்,போஸ்லேயும் அங்கம் வகித்தனர்.1780 ஜுலையில் முதலில் கர்நாடகா பின்னர் காஞ்சீபுரம் அடுத்து வேலூர் ஆகிய இடங்களை ஆங்கிலேயரிடமிருந்து கைப்பற்றியது இந்த கூட்டுப்படை.புக்ஸார் போரில் வெற்றி பெற்ற சர் ஹெக்டர் மன்ரோ ஹைதர் அலியோடு தோற்று துப்பாக்கிகளை ஒப்படைத்துவிட்டு கிளம்பினார்.1782 டிசம்பரில் ஹைதர் அலி மரணமடைந்தார்.1750 நவம்பர் 20 இல் பிறந்த திப்பு சுல்தான் 1763 இல் பாலக்காடு ராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க தந்தையுடன் ராணுவத்தில் இணைந்து மலபாருக்கு வந்தபொழுதுதான் போர் முறைகள் அறிமுகமாயின. தனது 13 வது வயதில் 1780 ஆண்டும் நடந்த போரில் கர்னல் பெய்லிக்கும்,1782 ஆம் ஆண்டு நடந்த போரில் கர்னல் ப்ரைட் நைட்டிற்கும் கனத்த பதிலடிக்கொடுத்ததில் திப்புசுல்தான் பெரும்பங்கு வகித்தார்.1766 இல் மலபார் முழுவதையும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வந்த ஹைதர் அலி அங்கு நிலவிய தீண்டாமையை ஒழித்தார்.ஜாதிக்கொடுமைகளுக்கெதிரான சட்டங்களை ஏற்றி நடைமுறைப்படுத்தினார்கள் திப்புவும்,ஹைதரும்.1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் நாள் மிர்சாதிக்கின் துரோகத்தால் பிரிட்டீஷ் தாக்குதலில் இரத்த சாட்சியாகும் வரை தனது தேசத்தை பாதுகாக்க துணிச்சலோடு தொடர்ந்து போராடினார் திப்பு சுல்தான்.

கிலாஃபத் இயக்கமும் மலபார் போரும்

இந்திய‌ சுத‌ந்திர‌ போராட்ட‌த்திற்கு பிற்கால‌த்தில் வ‌லுமைச்சேர்த்த‌ முக்கிய‌மான‌ கால‌க்க‌ட்ட‌ம்தான் கிலாஃப‌த் இய‌க்க‌ம் ந‌ட‌த்திய‌ போராட்ட‌ம்.துருக்கி கிலாஃப‌த்திற்கெதிரான‌ பிரிட்டன் அர‌சின் ந‌ட‌வ‌டிக்கைக‌ள் தான் கிலாஃப‌த் இய‌க்க‌ம் ஆர‌ம்பிக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு கார‌ண‌மாக‌ இருந்தாலும் பின்ன‌ர் அது இந்தியாவின் சுத‌ந்திர‌த்திற்கான‌ போராட்ட‌மாக‌ மாறிய‌து.தேவ்ப‌ந்த் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ த‌லைவ‌ர் ம‌ஹ்மூத் ஹ‌ஸ‌ன்,அவ‌ருடைய‌ சீட‌ர் உபைதுல்லாஹ் சித்தீகி,ம‌வ்லான‌ முஹ‌ம்ம‌து அலி,ஷ‌வுக்க‌த் அலி,ம‌வ்லானா அப்துல்பாரி,ஹ‌ஸ்ர‌த் மொஹானி ஆகியோர்தான் ஆர‌ம்ப‌கால‌ த‌லைவ‌ர்க‌ள்.நாடெங்கும் தீ போல் ப‌ர‌விய‌ கிலாஃப‌த் இய‌க்க‌த்தின் போராட்ட‌மும்,காந்திய‌டிக‌ளின் ஒத்துழையாமை இய‌க்க‌மும்தான் பின்ன‌ர் 1942 ஆம் ஆண்டு ந‌டைபெற்ற‌ "வெள்ளைய‌னே வெளியேறு" இய‌க்க‌த்திற்கு தூண்டுகோலாக‌ அமைந்த‌து.இக்கால‌க்க‌ட்ட‌த்தில் நினைவுக்கூற‌ப்ப‌ட‌வேண்டிய‌ முக்கிய‌மான‌ போர்தான் 1921 இல் ந‌டைபெற்ற‌ ம‌ல‌பார் போர்.குஞ்ஞாலி ம‌ரைக்காய‌ருக்கு பின் ஏராள‌மான‌ முஸ்லிம் த‌லைவ‌ர்க‌ள் ம‌ல‌பாரில் சுத‌ந்திர‌ப்போராட்ட‌த்திற்கு த‌லைமை வ‌கித்தார்கள். வெள்ளிய‌ங்கோட்டை உம‌ர் காதியும்,ம‌ம்புர‌ம் ஸ‌ய்யித் அல‌வி த‌ங்க‌ளும்,ஆலி முஸ்லியாரும்,வாரிய‌ம் குன்ன‌த் என்ற‌ ஊரைச்சார்ந்த‌ குஞ்சு முஹ‌ம்ம‌து ஹாஜியாரும் இதில் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள்.1852 ஆம் ஆண்டில் த‌ன‌து 97 வ‌து வ‌ய‌தில் ம‌ர‌ணிக்கும் வ‌ரை உம‌ர் காதி த‌ன‌து போராட்ட‌த்தைத்தொட‌ர்ந்தார்."அல்லாஹ்வின் பூமியில் வெள்ளைக்கார‌னுக்கு உதவிச்செய்யாதீர்கள்(படைச்சவன்ற பூமியில் வெள்ளக்காரன் கரம் கொடுக்கருது)".என்று அவ‌ர் பிர‌க‌ட‌ன‌ம் செய்தார்.மோஹ‌ன்தாஸ் க‌ர‌ம்ச‌ந்த் காந்தி ஆங்கிலேய‌னுக்கு வ‌ரி செலுத்தாமைப்போராட்ட‌மும்,ஒத்துழையாமை இய‌க்க‌மும் ஆர‌ம்பிப்ப‌த‌ற்கு முக்கால் நூற்றாண்டிற்கு முன்பு ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு இது.மார்க்க‌ அறிஞ‌ர்க‌ள் சுத‌ந்திர‌த்திற்கான கிளர்ச்சிகளில் ப‌ர‌வ‌லாக‌ ப‌ங்கேற்க‌ ஆர‌ம்பித்தார்க‌ள்.1849 இல் ம‌ஞ்சேரி கிள‌ர்ச்சியில் ஹ‌ஸ‌ன் மொய்தீன் குருக்க‌ளும்,ம‌ம்புர‌ம் ஸ‌ய்யித் அல‌வி த‌ங்க‌ளின் உற‌வின‌ரான‌ குஞ்சுகோயா த‌ங்க‌ளும் த‌லைமை வகித்தார்கள்.குஞ்சுக்கோயா த‌ங்க‌ள் இவ்வாறு பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்தினார்,"மார்க்க‌ரீதியான‌ கார‌ண‌ங்க‌ளினால் நாமும் கிள‌ர்ச்சியில் ப‌ங்குபெறுகிறோம்.ஏதேனும் ஒரு முஸ்லிமுக்கு பிர‌ச்ச‌னையோ அல்ல‌து உயிருக்கு ஆப‌த்தான‌ மிர‌ட்ட‌லோ ஏற்ப‌ட்டால் ஸ‌ய்யித்க‌ளாகிய‌ த‌ங்க‌ள்மார் அவ‌ர்க‌ளோடு சேர்ந்து ம‌ர‌ணிப்ப‌த‌ற்கும் த‌யாராக‌வேண்டும். என்று.(தங்கள் என்பவர்கள் கேரளா மலபார் பகுதிகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள்.இவர்கள் நபி(ஸல்...)அவர்களின் பேரர்களான ஹஸன்(ரலி...),ஹூசைன்(ரலி...)அவர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகின்றார்கள்). 1851 இல் மலப்புறத்திலுள்ள குளத்தூரிலும்,1852 இல் கண்ணூரிலுள்ள மட்டனூரிலும் கிளர்ச்சி நடைபெற்றது.ஸய்யித் அலவி தங்களின் மகன் ஸய்யித் ஃபைஸல் தங்கள் அவர்களை கிளர்ச்சிக்கு தலைமை வகித்த குற்றத்திற்கு 1852 பிப்ரவரி 12 ஆம் தேதி பிரிட்டீஷ் அரசு மக்காவிற்கு நாடு கடத்தியது.உயிரையும் இரத்தத்தையும் கொடுத்து கேரளா மாப்பிள்ளைமார்கள் போராட்டத்தைத்தொடர்ந்தார்கள்.1855 இல் மலபார் கலெக்டர் கனோலியின் பங்களா மீது தாக்குதல் நடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.19 ஆம் நூற்றாண்டில் மாப்பிள்ளைமார்களின் கிளர்ச்சியை அடக்குவதற்காக சிறப்புச்சட்டத்தையும்(Mappillas outrageous act),சிறப்பு போலீஸ் படையையும் பிரிட்டீஷார் ஏற்படுத்தினார்கள்.

1921 ஆகஸ்ட் மாதம் 26 ஆம்தேதிதான் பூக்காட்டூர் யுத்தம் நடைபெற்றது.பிரிட்டீஷ் ராணுவம் 400 பேரைக்கொலைச்செய்ததோடு மஸ்ஜிதை நோக்கி துப்பாக்கிச்சூடும் நடத்தியது.மஸ்ஜித் தகர்க்கப்படாமலிருப்பதற்காக சரணடைந்த ஆலி முஸ்லியாரையும் ஆதரவாளர்களையும் கோயம்புத்தூர் ஜெயிலுக்கு கொண்டு சென்று தூக்கிலேற்றி கொலைச்செய்தார்கள்.எர நாடு,பொன்னானி,வள்ளுவநாடு தாலுக்காக்களில் உள்ள 200 கிராமங்களில் பரவிய கிளர்ச்சியின்போது மாப்பிள்ளைமார்கள் உட்பட 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.கிளர்ச்சிக்கு தலைமைத்தாங்கிய தலைவர்கள் உட்பட 2 ஆயிரம் பேரை நாடுகடத்தினார்கள்.தெற்கு மலபார் பகுதியில் முஸ்லிம்களில் குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு நபரையாவது கைதுச்செய்தார்கள்.வாரியன் குன்னத் குஞ்சுமுஹம்மது ஹாஜியார் உட்பட்ட தலைவர்களை மரப்பீப்பாயில் அடைத்து உருட்டிச்சென்று மலப்புறம் கோட்டக்குன்னில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பிறகு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொழுத்தினார்கள்.

சுதந்திர போராட்டத்தின் இறுதிக்கட்டமும் சுதந்திரத்தை பெறுதலும்

1942 இல் ஆரம்பிக்கப்பட்ட "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தின் போராட்டம் இந்தியாவிற்கு பூரண சுதந்திரத்தை வழங்குவதே தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு பிரிட்டீஷ் அரசை வரச்செய்தது.இறுதிக்கட்ட சுதந்திரப்போராட்டத்திலும் முஸ்லிம்கள் மிகப்பெரிய பங்கை செலுத்தினார்கள்.தன்னுடைய கவிதைகள் மூலம் சுதந்திர போராட்டத்திற்கு வலுவூட்டிய அல்லாமா இக்பாலும்,துணிச்சல் மிக்க அரசியல் தலைமைக்கு சொந்தக்காரரான முஹம்மது அலி ஜின்னாவும்,கறைபடியாத தேசப்பற்றாளராகிய அபுல்கலாம் ஆசாதும் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

450 வருடங்கள் நீண்ட போராட்டத்தின் மூலம் பெற்ற இந்த சுதந்திரத்தின் உண்மையான வாரிசுகள் நாம்.புதிய யுக்திகள் மூலம் மேற்கத்திய ஆக்கிரமிப்பு சக்திகள் இந்நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் இந்த வேளையில் நாம் சிந்திக்கவேண்டும், போராடி பெற்ற சுதந்திரத்தை பேணிப்பாதுகாப்பதற்கும் போராடவேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.